"துயரை விளம்ப வழி அறியேன்

ஜயன் ஜயனே
அழுது அழுது காலம் கழிகிறது
தொழுது தொழுது பொழுது விடிகிறது
விடிந்த பொழுதெல்லாம் விரக்தியில் முடிகிறது
விடியாமல் இருக்காதா பொழுது என
புலப்பி அழுகின்றேன் அய்யா
கைபிடித்த நாள் முதல் உனை
விட்டுப் பிரிந்ததில்லை
இப்போ ஏன் எனை விட்டுப்பிரிந்தாய்?
உண்ணும், போதும் உறங்கும் போதும்
உனைப்பிரிந்த துயரம்
எனை வாட்டி வதைக்கிறது
போகும் இடம் எதுவும் தெரியவில்லை
வாழும் இடம் எதுவும் தெரியவில்லை
தனிமரமாய் தவிக்கின்றேன்
அக்காள் தம்பி எல்லாம்
தனிக் குடித்தனமாய் ஆனதனால்
ஆறுதலுக்குக்கூட அருகில் ஒருவரில்லை
அழும்பிள்ளை ஒருபக்கம்
அவதியுறும் மனம் மறுபக்கமாய்
வாழ்வு தொலைகிறது ……..?
பூவோடும் பொட்டோடும் வாழ்ந்த எந்தன்
வாழ்வு கருகிப்போனதாய் கலங்குகிறேன்
காலன் ஏன் இப்படி கருவறுத்தான்.
ஓராண்டு முடிந்தாலும் உன்நினைவு
நான் மாண்டுபோனாலும் மடியாது
மஞ்சள் குங்குமமும் மாவிலை தோரணமும்
மணிமகுட மண்டபமும் நான்
காண இனி முடியாது போனாலும்
மாதரசி இவள் என்று மனசால்
வாழ்த்தும் வண்ணம் வாழ்வேன் அய்யா
மகள் பிரவீணா
சின்ன வயதில் சிணுங்கியழும் போது
சிரித்த முகத்துடனே சிறுகதைகள் பேசி
அன்புடனே அரவணைத்து கல்வியூட்டி
பண்பாக வழத்தாரே எந்தன் அப்பா
பொன்னநகரம் லண்டன்
முழுவதையும் எனக்குக் காட்டி
பொழுதெல்லாம் என்னோடு
அருகிருந்து அரவணைத்து
அப்பா எனக்கு இது வேண்டும் என்று
கேட்கும் போதெல்லாம் கொட்டித்தரும் அப்பா
லண்டனிலே முருகன் கோவில் காட்டி
அங்கே சூரன் போரும் காட்டி
மஞ்சத்தோடு மால்மருகன் தேரும் காட்டி
மகிழ்வான முருகன் வேலும் காட்டி
வேலவனே தலைவன் என விவேகமூட்டி
விம்பில்டன் அருகினிலே விளையாட்டுக் காட்டி
வீரமறவரது மாவீரர் தினம் காட்டி
பொங்கலோடு வருடமெல்லாம்
புகழோடு செய்து காட்டி
புங்குடுதீவின் புகழை தினமும் ஊட்டி
புங்கை கண்ணகியாள் கதையும் காட்டி
ஈலிங் கனகதுர்க்கைஅம்மன் அழகு காட்டி
நயினை நாகபூசணி அம்பாள் காட்டி
தலைநகரில் தன்னேரில்லாத் தலைவன் காட்டி
கலையுருவில், காவடிகள் எனக்குக்காட்டி
தலைவன் புகழ் பாடி நின்றீர்
கற்றவரும் மற்றவரும் போற்ற வாழ்ந்தீர்
கதிகலங்க என்னை விட்டு எங்கு சென்றீர்
அப்பா! அப்பா! அப்பா! எங்கு சென்றீர் ¨!

தகவல்:மனைவி ஜெகதீஸ்வரி மகள் பிரவீணா லண்டன்

 

 

கதிரவன் கொம்மின் ஆழ்ந்த அனுதாபங்கள்

 

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com

  Neue Seite 1