வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வகையாய்ப் பாடுவாய் எனை ஜாடைபார்த்து
வந்தென்று சேர்ந்ததோ பாவியார் கண்ணூறு
வழியிலே எனை நீ விட்டுச் சென்றாயே?
மறந்திட உனை நான் நினைக்கும் அக்கணமே
மரணம் உன்னை நினைக்கத் தொடங்கிவிடும்
இன்றும் ஞாபகம் என்றும் நீ சொல்வது
இலவுமரம் காத்த கிளியாக்கி விட்டாயே?
சுருளான என் கூந்தலைக் கோதித்தடவி
சுடும் உன் விரலினால் ஜாலங்கள் செய்து
சுடலைக்குப் போகும் நாளொன்று வருமின்
சுடலையின் தீயில் சங்கமிப்போம் என்றாயே?
பொன் நாள் இதுபோலே வருமோ இனிமேலே
பொய்யாய்ப் போனதோ நீ பாடியது அன்று
காதலிலே போல்வியுற்றாள் கன்னியொருத்தி
கண்ணீர் திரையிடப் பாடவைத்தாயே?
கழுத்திற் சங்கிலி செய்தது புண்ணியம்
கதையாய்ச் சொல்லிச் சிலுமிசம் செய்வாய்
கழுத்தினிற் தாலியை ஏற்ற மறுத்தே
கழுத்தை முடமாய் ஆக்கிச் சென்றாயே?
இரத்ததானம் நாம் செய்த போதெல்லாம்
இரத்தமிரண்டும் ஒரே ரகம் என்றாய்
கோடை மழையில் நாம் குளித்தநாட்களிற்
குறும்புகள் செய்து களைத்துக் களித்தாயே?
அரிவு வெட்ட நீ செல்கின்ற தருணம்
அரிவாள் போலுந்தன் மீசையைத் தடவ
அரிவாள் கொண்டு அறுத்தாலுங் கூட
அகலாது நம் காதல் எனச் சொன்னாயே?
காதல் சுவாசமெனக் கண்ணால் மொழி பேசி
காதிலும் சொல்வாயே கவ்விக் கடித்து
காதலின்றேல் சுவாசமே இல்லையென்பாய்
காதலை மறந்து கபோதியாய் ஆக்கினாயே?
அரளி மரமொன்று கொல்லையிலே வைத்து
அல்லும் பகலும் நீ நீரூற்றி வந்தாய்
எதற்கு அத்தான் எனக் கேட்டபொழுதினில்
எனை இழந்தால் நீ உண்பதற்கென்றாயே?
குட்டக் குட்டக் குனிபவள் மடைச்சி உன்
குறும்புகளால் எனை மகிழ்ச்சியில் வைத்தாய்
குறும்புகளால் மகிழ்ந்த என் முகமதுதன்னை
குறுகிக் கூனிக் குனிய வைத்தாயே ?
கைவிரல் தனது கண்ணினைக் குத்தினாற்
கைவிரல தன்னை வெட்டியோ எறிவார்?
இருந்த நாட்களில் அன்பாய் இருந்தோம்
இனி நாம் போவது அவரவர் வழியே?
இயந்திர உலகினில் இதையே எண்ணி
இருக்கும் வாழ்க்கையை இழக்கவே மாட்டேன்
எவருடன் தான் நீ வாழ்ந்த போதிலும்
எனக்கென இடமுன் இதயத்தில் இருக்குமா?
பண்ணாகமணி
டென்மார்க்
|