மனித வாழ்வில் கொள்கை அவசியம்                   கதிரவன்.கொம்

               

மனிதராகப் பிறந்தோர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஓர் இலட்சியம் குறிக்கோள் உண்டு. அவர் தம் உள்ளத்து உணர்வுகளை பல்வேறு வழிகளில் வெளிக்காட்டுவர். இது அவர்களது தனித்தன்மையை பொறுத்தது. என்னைப் பொறுத்தவரையில் யான் ஓர் எழுத்தாளனாக வேண்டும்மென்று விரும்புகிறேன். இதுவே என் கொள்கையும் குறிக்கோளும் ஆகும்.

இன்று சமுதாயத்தில் பொய்மையும் பித்தலாட்டமும் தலைதுக்கியுள்ளது. சமூகவிரோதச் செயல்கள் அதிகரித்துவிட்டன. இச்செயல்களில் ஈடுபடுவோர் நல்லவர் போல் வேடமிட்டு நாட்டை நாசமாக்குகிறார்கள். இத்தகைய சமூகவிரோதிகள் அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை ஊடுருவியுள்ளனர். இவர்களது போலிவேடங்களை அம்பலப்படுத்தவும் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் மூடப்பழக்கவழக்கங்களை அகற்றவும் எனது பேனாவை பயன்படுத்த விரும்புகிறேன்.

என்னிடத்தில் உள்ள எழுத்தாற்றலைப் பயன்படுத்தி கதைகள், கட்டுரைகள், கவிதைகள் பல படைத்திட வீம்புகிறேன். இன்றைய சூழ்நிலையில் சமூகத்திற்கும் நாட்டிற்கும் நான் ஆற்றவிருக்கும் பணியாக இதனைக் கருதுகிறேன். துப்பாக்கிமுனையிலும் விட பேனாமுனை வலிமை வாய்ந்தத என்பர். எழுத்தாளன் சமூகத்தின் கண்ணாடி போன்றவன். சமூகத்தின் பிரச்சனைகளை உள்ளதை உள்ளபடி வெளிகொணரும் ஆற்றல் படைத்தவன். அவன் சமூகத்தின் வழிகாட்டி. பணத்திற்காகவோ பதவிக்காகவோ விலைபோபவனல்லன். அத்தகைய பண்புகள் கொண்டவனே உண்மையான எழுத்தாளனாவான். கூலிக்குமாரடிப்பவனும் அதிகாரவர்க்கத்தின் எடுபிடியாக செயற்படுபவனும் தன் முகவரியை இழந்தவனே.

நமது நாட்டைப் பொறுத்தவரையில் இன்று புரையோடிப்போய்யுள்ள இனப்பிரச்சினையின் உண்மை நிலையினை உலகிற்கு எடுத்துக்காட்டி சமாதான முறையில் தீர்த்து வைக்கும் பெரும் பொறுப்பு அரசியல் தலைவர்களிடம் மட்டுமின்றி எழுத்தாளனையும் பெரிதும் சார்ந்தது. நாட்டு மக்களுக்கு உண்மை நிலையினை எடுத்து கூறும் வகையில் எனது பங்களிப்பை சிறப்புற ஆற்றுவேன்.

சமூகத்தில் தலைதூக்கி நிற்கும் சீதனப்பிரச்சனை, சாதிவேறுபாடு, சமயசச்சரவுகள் மற்றும் போதைபெருள் பாவனை போன்றவற்றால் ஏற்படும் இன்னல்களை களையும் வகையில் எனது படைப்புக்களும் ஆக்கங்களும் அமையுமென நம்புகிறேன்.

சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற் புதிது சோதி மிக்க நவ கவிதை எந்நாளுமழியாத மகாகவிதை என பாரதியார் குறிப்பிட்டது போன்று எனது எழுத்துக்களும் அழியாமல் நாட்டிற்கும் சமூகத்திற்கும் நலமும் வளமம் சேர்ப்பதாக அமையும்.

நாட்டிற்குழைப்போம் என்ற கொள்கையுடன் இலட்சிய பாதையில் எனது பேனா செல்லும்....

நன்றி!  கமலா