முத்தான முத்தமிழ்

 
 
Auvaiyaar1நம் செந்தமிழை இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகையாகப் பிரிக்கிறோம். தமிழைத் தவிர உலகில் உள்ள வேறு எந்த மொழியிலும் இப்பகுப்புகள் காணப்படவில்லை என்பது அறிஞர்கள் கருத்து. தமிழில் இவை மூன்றுக்கும் பொதுவான இலக்கண இலக்கியங்களும் காணப்படுகின்றன. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைப்புடையது, ஒன்றுக்கொன்று இன்றியமையாதது ஆயினும் இம்மூன்று வகைக்கும் தனித்தனி இலக்கணங்களும், இலக்கிய வகைகளும் காணப்படுகின்றன.

நம் செந்தமிழை இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகையாகப் பிரிக்கிறோம். தமிழைத் தவிர உலகில் உள்ள வேறு எந்த மொழியிலும் இப்பகுப்புகள் காணப்படவில்லை என்பது அறிஞர்கள் கருத்து. தமிழில் இவை மூன்றுக்கும் பொதுவான இலக்கண இலக்கியங்களும் காணப்படுகின்றன. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைப்புடையது, ஒன்றுக்கொன்று இன்றியமையாதது ஆயினும் இம்மூன்று வகைக்கும் தனித்தனி இலக்கணங்களும், இலக்கிய வகைகளும் காணப்படுகின்றன.


Auvaiyaarதமிழில் இம்மூன்றும் சேர்ந்தே விளங்குவதால், முத்தமிழ், மும்மைத்தமிழ் என்றெல்லாம் சிறப்பாக அழைக்கப்படுகிறது.

'பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா'

என்று அவ்வைப்பிராட்டி விநாயகப் பெருமானை வேண்டிக்கொள்வதில் இருந்தும்,

'ஓருந்தமிழொரு மூன்று முலகின் புறவகுத்துச்
சேரன் தெரித்த சிலப்பதிகாரம்'
என்ற இளங்கோவடிகளின் வரிகளாலும் இதை அறியலாம்.

மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கங்களில் இம்மூன்று வகைத்தமிழும் வளர்க்கப்பட்டு வந்தது.இந்த மூன்று தமிழுக்கும் இலக்கணம் செய்தவர் அகத்தியர் என்பர். இவரே தொல்காப்பியருக்கு ஆசிரியர் என்ற குறிப்பும் பண்டைய இலக்கியங்களில் காணப்படுகின்றன. இலக்கியங்களில் சிலப்பதிகாரமே, இயல் இசை நாடகம் என்ற மூன்று கூறுகளும் மிக்க அழகுடன் இசைய அமைக்கப்பெற்ற நூல் ஆகும். எனவேதான் இது முத்தமிழ்க்காப்பியம் என்று அழைக்கப் படுகிறது. வேறு எந்த நூலிலும் இவை மூன்றும் இணைந்து காணப்படுவதில்லை.

இயற்றமிழ் என்பது செய்யுள் அல்லது உரைநடை குறித்தது. இது நல்ல நடையுடன் இலக்கணம் வழுவாமல் இயற்றப்படுவது. இயற்றமிழுக்கான இலக்கணங்கள் ஐந்து வகைப்படும். அவை- எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் ஆகியவை ஆகும். இதில் எழுத்திலக்கணம், எழுத்தின் வகைகளை வரையறுக்கிறது. சொல்லிலக்கணம் சொற்கள் எழுத்தில் இருந்து உருவாவதைப் பற்றிய விளக்கம் ஆகும். பொருளிலக்கணம், அகம் புறம் என இரண்டாக வகைப்படுத்தப்படும். யாப்பிலக்கணம் பல வகையான செய்யுள் வகைகளையினையும், அணி இலக்கணம் உவமை உருவகம் முதலிய அலங்காரங்கள் குறித்தும் கூறுவது. இவ்வைந்து வகையான இலக்கணங்களையும் முறையாகக் கூறும் தலையாய நூல் தொல்காப்பியமாகும்.

தமிழில் இசைக்கும் நாடகத்திற்கும் இன்றியமையாது இருப்பதன் காரணமாகவும், பொதுவாக அன்றாட வாழ்வில் அனைவரும் பயன்படுத்துவது இதுவே என்பதாலும் இயற்றமிழ் முத்தமிழில் முதலிடத்தைப் பிடிக்கிறது.

இசைத்தமிழ் இராகம், தாளம், அழகிய மொழிநடை இவை அனைத்தும் இசைந்து அமைந்திருப்பதால் இசைத்தமிழ் என்று பெயர் பெற்றது. இசையின் பெருமையை உணர்ந்ததாலோ, அல்லது பிறருக்கு உணர்த்தவோ தான் பண்டைத்தமிழர் இசைத்தமிழை நடுநாயகமாக அமைத்திருக்கின்றர் போலிருக்கிறது. இசைத்தமிழ் குறித்த செய்திகளையும் நாடகத்தமிழ் குறித்த பாகுபாடுகளையும் அறிந்துகொள்ளுவதற்கு சிலப்பதிகாரமே அதிக அளவு துணைபுரிகிறது.

வடமொழியில் இசையின் ஏழு சுரங்கள் குறித்துக் கூறப்படும் பெயர்களான 'ஸட்ஜம்', 'ரிஷபம்', 'காந்தாரம்', 'மத்திமம்', பஞ்சமம்', 'தைவதம்', நிஷாதம் என்னும் ஏழும் தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என வழங்கப் பட்டன. அனைவருக்கும் பொதுவான குரல் 'ஸட்ஜம்' ஆகும். அதனைத் தமிழில் 'குரல்' என்றே வழங்குவது, தமிழரின் இசையறிவையும் நுணுக்கமான ஆராய்ச்சித்திறனையும் ஒருங்கே புலப்படுத்துகிறது.

ஸ ரி க ம ப த நி என்னும் ஏழு சுரங்களும் தமிழில் ஆ,ஈ,ஊ, ஐ, ஓ, ஔ என்ற ஏழு நெடில் எழுத்துக்கள் ஆகும். இந்த ஏழு நரம்புகளும் இணைந்தது பண்ணென்று வழங்கப்படும். அவற்றில் இருந்து பிறந்தவை திறங்கள் எனப்படும். பண்களினை வடமொழியில் மேளகர்த்தா இராகங்கள் எனவும் திறங்களை ஜன்ய ராகங்கள் என்றும் வழங்குவர். இவ்வாறு பிறந்த பண்களும் திறங்களும் மொத்தம் 11991 என்று கூறப்படுகிறது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகியவை ஐந்து பெரு நிலங்களுக்கும் உரியவை. இவை பெரும் பண்கள் எனப்படும். இதே போல் ஒவ்வொரு பொழுதுக்கும் ஒவ்வொரு பண் உண்டு. எந்தெந்தப் பொழுதில் எந்தெந்தப் பண்ணைப் பாடவேண்டுமோ அதை வழுவின்றிப் பாடி வந்தனர். இதனால் கேட்கும் மனிதருக்கும் பறவை, விலங்குகளுக்கும் இன்பம் பிறக்கும் என்று பண்டைத் தமிழர் நம்பினர். ஆனால் இன்று பண்கள், திறங்கள் முதலியவை அழிந்தே விட்டது எனலாம். தமிழிசை என்று இன்று வழங்கப்படுவது கருநாடக இசையில் அமைந்த தமிழ்ப்பாடல்களே. சிந்து, கும்மி, தாலாட்டு முதலிய சில வகைகளே இன்று எஞ்சியுள்ளன.

நாடகக்கலை சங்க காலத்தில் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தது. மக்கள் கருத்தை மன்னனுக்குத் தெரிவிக்கும் பொருட்டும், மன்னர்களது சிறப்பை விளக்கும் முகமாகவும், இறைவனின் திருவிளையாடல்கள் குறித்தும் நாடகங்கள் நடை பெற்றன. நாடகங்களைக் கூத்து என்றும் வழங்குவர். இதற்கு மன்னர்கள் ஆதரவும் மக்கள் ஆதரவும் நிரம்பவே கிடைத்து வந்தது. மிகுந்த உழைப்பின் காரணமாக அயர்ச்சியடைந்த மக்கள் ஓய்வு நேரங்களில் நாடகத்தினைப் பார்த்து இன்புற்று வந்தனர். இதை
' பாட லோர்த்தும் நாடகம் நயந்தும்' என்ற பட்டினப்பாலை வரிகளாலும்,

'கூத்தாட் டவைகுழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று.' என்ற திருக்குறளாலும் அறியலாம்.

நாடகத்தின் நுணுக்கங்களை விளக்கும் பல இலக்கண நூல்கள் அழிந்துவிட்டன. எனினும் இவை குறித்து நாம் கொஞ்சமேனும் அறிந்துகொள்ளத் துணையாக இருப்பது சிலப்பதிகாரமே. இந்நூல் நாடக அரங்கம், அதன் அமைப்பு, நாடகத்திற்கு இன்றியமையாதவர்களாகிய இசையாசிரியர்கள், வாத்தியக்காரர்கள், நாடகங்களில் உபயோகப் படுத்தப் படும் வாத்தியக் கருவிகள் இவை அனைத்தும் அரங்கேற்றுக்காதையில் அழகுற விளக்கப் பட்டுள்ளன.

இன்று தமிழகத்தில் நாடகக் கலை அவ்வளவு சிறப்பிடம் பெற்றிருக்கவில்லை. எனினும் திரைப்படங்களும் ஒருவிதத்தில் நாடகங்களின் வேறு வடிவமே அல்லவா? அக்கால் நாடகங்களில் உரை நடை வசனங்களும், பாடல்களும் இடம் பெற்றது போலவே இன்றும் திரைப்படங்களில் இவை இடம் பெறுவது ஒப்பு நோக்கத் தக்கது.

இயலோ இசையோ நாடகமோ எதுவாயினும் தமிழ் அமுதாய் கனியாய் இனிப்பது உண்மையே!!!

 
 
 

     முகப்பு

 

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com