இயல், இசை, நாடகம் இம் மூன்றையும் இணைத்துச் செய்யப்படுவதுதான் வில்லிசை

வில்லிசைக் கலைஞர் சோதி சின்னமணி கணபதிப்பிள்ளையுடனான ஓர் சந்திப்பு:

1954ஆம் ஆண்டு, ஈழம் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து அவரிடம் சில நகைச்சுவை துணுக்களை கற்றறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரிடம் பெற்ற அனுபவங்களினாலும் அவரது ஆசீர்வாதப் பலத்தினாலுமே நான் திருப்பூங்குடி வி.வி.கே.ஆறுமுகம் அவர்களின் வில்லுப்பாட்டுக் குழுவின் நகைச்சுவைப் பகுதியை ஓரளவு திறமையாகச் செய்து வந்தேன். ஆசிரியர் திருப்பூங்குடி ஆறுமுகம் அவர்கள் எட்டியாந்தோட்டைக்கு மாற்றலாகிச் சென்றார். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இக்கலையை மேலும் வளர்க்க யாரும் முன்வராத ஒரு நிலையும் யாழ் பகுதியில் வில்லிசையில் ஒரு தேக்க நிலையும் உண்டாகியது. இந்த நிலையில், ஆசிரியர் சோமசுந்தரம் அவர்கள் என்னிடம் வந்து "தம்பி உன்னிடம் சகல தகுதிகளும் இருக்கின்றன. நீ இக்கலையைத் தொடங்கு நான் உனக்கருகிலேயே இருக்கிறேன்" என்று கூறி ஊக்கப்படுத்தினார். 1968ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று செல்வச்சந்நிதியிலே எமது "கலைவாணர் வில்லிசைக் குழுவின் அரங்கேற்றம் நடைபெற்றது" என்று தனது அனுபவ பகிர்வுகளை எம்மோடு பகிர்ந்து கொள்ளும் வில்லிசைக் கலைஞரான சோதி சின்னமணி கணபதிப்பிள்ளை. மேலும் எமது கேள்விகள் பலவற்றுக்கு விளக்கமளித்தார்.
 

நீங்கள் ஒரு நாடக நடிகர். மேடைகள் பல கண்டவர். அத்துறையில் உங்கள் சிறப்பான நடிப்பால் மதிப்புப் பெற்றவர்கள். நாடகத்துறையில் பெருமை பெற்ற நீங்கள் வில்லிசையின் பால் நாட்டம் கொண்டமைக்கான காரணம் எதுவாக இருக்கும்? 

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் குழுவினர் இலங்கையில் வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக வந்திருந்தனர். பம்பலப்பிட்டி கிறிண்லன்ட்ஸ் ஹோட்டலில் அவர்கள் தங்கியிருந்த வேளை சினிமாஸ் லிமிட்டெட் அதிபர் குணரத்தினம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது. நாடகம்@ வில்லிசை தொடர்பான நுணுக்கங்களைக் கேட்டு அறிந்து கொண்டேன். நான் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் சந்திப்பிலேயே என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் "கேசரிவர்மன்" (மனோகராவில் வரும் கேசரிவர்மன் மாதிரி) என்று அழைக்கப்பட்டேன். அவரின் காலில் தொட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன். "என்னுடன் வாடா" என்று கலைவாணர் அழைத்தார். என் தாயார் என்னைப் போகவிடாதபடியால் அவருடன் தமிழ் நாட்டுக்குப் போக முடியவில்லை. இருந்தும் அவரிடமிருந்து வில்லுப்பாட்டு மெட்டுக்களையும் உத்திகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஆகவே, எனது கலை ஆவர்வத்திற்கு கலைவாணர் வழிகாட்டியாக இருந்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் திருப்பூங்குடி ஆறுமுகம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வில்லிசைக் குழுவில் தாவடி வடிவேலு சேர்ந்;திருந்தார். வடிவேலு அக்குழுவில் இருந்து விலகிய பின் நான் அவர் குழவில் இணைந்து கொண்டு செயற்பட்டேன். 1968ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி கலைவாணர் வில்லிசைக் குழுவில் ஆர்மோனிய வித்துவான் ஆர்.சோமசுந்தரம், மிருதங்க வித்துவான் என்.தங்களம், எஸ்.ரி.அரச, இரா.பற்குணன், ரி.மகாலிங்கம் ஆகியோர் இருந்தனர்.

தங்கள் குடும்பம் கலைக்குடும்பம் என்று சொல்லகின்றார்களே அதன் உண்மையான தார்ப்பரியத்தைச் சற்று விளக்குவீர்களா?

வடமராட்சிப் பகுதியிலே கலைக்கிராமம் என்று போற்றப்படும் மாதனை என்னும் கிராமத்தில் 30-03-1936இல் பிறந்தேன். தந்தையார் நாகலிங்கம். தாயார் இராசம்மா. நான் இவர்களுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தேன். எனது தந்தையார் முத்தமிழ் வித்தகர். புராண இதிகாசங்களில் புலமை பெற்றவராக இருந்தார். தாயார் இசை ஆர்வமும் கலை ஆர்வமும் மிக்கவர். ராக பாவத்துடன் பாட வல்லவர். எனது அண்ணர் க.நா.நவரத்தினம் அவர்களும் சிறந்த நடன, நாடகக் கலைஞர். இலங்கை வானொலி நாடகங்கள் பலவற்றில் நடித்துப் பேர் எடுத்தவர். அன்றைய கல்வி அமைச்சர் பி.பி.ஜி.கலுகல்ல அவர்களினால் "நடன கலாமணி" என விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். ஒரு முறை இராமாயணம் நாடகத்திலே நான் இலங்கேஸ்வரனாகவும் அண்ணர் நவரத்தினம் மண்டோதரியாகவும் நடித்த போது, கலையரசு சொர்ணலிங்கம் அந்த நாடகத்தை வந்து பார்த்தார். பண்பட்ட நடிப்பினால் பாத்திரங்களுக்கு உயிரூட்டி நடித்த எம் இருவரையும் வெகுவாகப் பாராட்டியதோடு "நாடக இரட்டையர்கள்" எனச் சிறப்புற அழைத்தமையைப் பெருமையாக எண்ணுகின்றேன். பாட்டுக் கலையை இலங்கை முழுவதும் எடுத்துச் சென்று பிரபல்யமாக்கியவர் திருப்பூங்குடி ஆறுமுகமாவார். சபா சதாசிவம், தாவடி வடிவேல், லடீஸ் வீரமணி ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஸ்ரீதேவி ஐயர், ஈழ நல்லூர் சாம்பசிவ சோமஸ்கந்த சர்மா, உடப்பு ஸ்ரீ சோமஸ்கந்தர், சோக்கல்லோ சண்முகநாதன், இராசையா ஸ்ரீதரன் அவர்களும் வில்லிசைக் கலைஞர்கள். 

வில்லிசை பற்றி உங்கள் தனித்துவமான அபிப்பிராயம் எப்படி என்று விளக்குவீர்களா?

இயல், இசை, நாடகம் இம் மூன்றையும் இணைத்துச் செய்யப்படுவது தான் வில்லிசை. இந்த மூன்றிலும் ஒருவர் வல்லவராக இருந்தால்தான் வில்லிசையைத் திறம்பட நடத்த முடியும். பேசும் ஆற்றல், இசை ஞானம், நாடக அனுபவம் உள்ளவரால் தான் வில்லிசையில் மிளிர முடியும். இந்த மூன்று துறைகளிலும் புலமை உள்ளவராக இருப்பதுடன் நகைச்சுவை கலந்து எனது வில்லிசைக் கச்சேரிகளை நடத்தி வருவதனால் மக்கள் மனதில் மிகுந்த வரவேற்புக் கிடைத்துள்ளது. சினிமாப்பாடல், துள்ளிசை, பொப்பிசை ஆகியவற்றின் கவர்ச்சியால் பழைய பாரம்பரியம் மறைக்கப்பட்டிருக்கின்றது. நாட்டுப் பாடல் மெட்டில்தான் வில்லுப்பாட்டு அமைவது சிறப்பானது. தெம்மாங்கு, கடற்பாட்டு, கும்மி, காவடிச்சிந்து, தாலாட்டு, ஒப்பாரி ஆகிய நாட்டுப்புற பாடல் மெட்டுக்களே வில்லுப்பாட்டின் தனித்துவத்தை உணர்த்தி நிற்கும். நகைச்சுவை கலந்த வில்லுப்பாட்டை ஒரு பகுதியினர் அரசிக்கிறார்கள். வில்லுப்பாட்டின் தனித்துவம் குன்றாத வகையில் நகைச்சுவை கலந்த வில்லிசையை செய்து வருகின்றேன்.

வெளிநாடுகள் பலவற்றக்கும் சென்று வில்லிசைக் கச்சேரிகளை நடத்தி புகழ்தேடி வந்துள்ளீர்கள். அவற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாமா? 

வெளிநாடுகளில் இருந்த வரவேற்பு எக்கச்சக்கம். சின்னமணி என்ற பெயர் உலகம் முழுவதும் வியாபித்திருக்கின்றது. 1977ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று கலைவாணர் வில்லிசைக் குழுவினராகிய நாங்கள் எயார் லங்கா விமானம் மூலம் மலேசியா பறப்பட்டோம். எமது வில்லிசைக் குழுவின் ஆர்மோனியச் சக்கரவர்த்தி சி.மு.சோமசுந்தரம், கலைஞர் எஸ்.ரி.அரச, மிருதங்க வித்துவான் பொன் ஆத்மானந்தா, செ.தங்கவேல் ஆகிய நால்வருடன் நானும் இருந்தேன். அந்த நாட்டு நேரப்படி இரவு பதினொன்றுக்கு நாம் கோலாலம்பூரை அடைந்தோம். எமது வில்லிசைக் கருவிகளை கண்ணுற்ற விமான நிலைய அதிகாரி மூன்று நாட்களுக்குரிய விசாவைச் சிபாரிசு செய்து மறுநாள் உரிய அலுவலகத்திற்குச் சென்று விசாவை நீடிக்கும்படி கூறிவிட்டு அகன்றுவிட்டார். நாம் எவ்வளவோ மன்றாடி, ஒரு மாதத்திற்குரிய அனுமதிக்கான சிபாரிசைச் செய்யும்படி கேட்டும் அவர் மறுத்துவிட்டார். நாம் மலேசியா சென்றிருந்ததன் நோக்கம் தொடர்ந்து இரண்டு, மூன்று மாதங்களாவது வில்லிசை நிகழ்ச்சிகளைச் செய்ய வேண்டுமென எண்ணியிருந்தோம். விசா தொடர்ந்து கிடைப்பதற்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் உதவினார்கள். அசுர வேகத்தில் வில்லிசை நிகழ்ச்சிகளைச் செய்தோம். மலேசியாவில் இருந்த 144 நாட்களில் 140 நிகழ்ச்சிகளைச் செய்தோம். சிங்கப்பூர் ரேடியோவில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைச் செய்தோம். மலேசியா கூ.ங. என்னைச் செவ்வி கண்டு ஒளிபரப்பியிருந்தது. மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அளவிட்டுக் கூறமுடியாதபடி எமது வில்லிசைக் கச்சேரிகள் நிகழ்ந்தன. எமக்கு அங்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அமோக பாராட்டுக்களையும் பரிசில்களையும் பெற்றோம். தங்க மோதிரங்கள், தங்க மாலைகள் எல்லாம் எனக்குப் பரிசாகக் தந்தார்கள். கோலாலம்பூர் வள்ளலார் மன்றம் "வில்லிசைக் கலைஞனான சோதி" என்ற பட்டத்தையும் சலாங்கூர் சைவ மங்கையர் சங்கம் "வில்லிசை வித்தகன்" என்ற பட்டத்தையும் எப்போ பத்திரிகையாளர் சங்கம் "வில்லிசை வாணன்" உன்ற பட்டத்தையும் பத்திங் திபாகஸிக் கலையிரவு மன்றம் "முத்தமிழ் மாமணி" என்ற பட்டத்தையும் சிங்கப்பூர் செண்பக விநாயகர் ஆலய பரிபாலன சபை "வில்லிசை மாமணி" என்ற பட்டத்தையும் தந்து என்னைக் கௌரவித்தன. இன்னும் பல பட்டங்களும் கௌரவங்களும் கிடைத்தன. 2002 ஜூனில் கனடாவுக்குச் சென்றிருந்தேன். "தமிழர் தகவல்" எனது படத்துடன் "கனடாவைக் கலக்கும் கலாவிநோதன்" என்னும் மகுடத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. "ஈழத்தின் பட்டிதொட்டியெங்கும் தமது வில்லிசையால் புகழ்பெற்றுத் துலங்கும் மண்வாசனைக் கலைஞர் கலாவிநோதன் கணபதிப்பிள்ளை அவர்களின் வில்லிசை நிகழ்ச்சி இப்பொழுது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. தமது ஒரு பகுதிக் குழுவுடன் இங்கு வந்திருக்கும் சின்னமணி எனப் பெணர் கொண்ட கலாவிநோதன் கணபதிப்பிள்ளை அவர்களின் வில்லிசை அனேகமாக இங்குள்ள சகல ஆலயங்களிலும் இடம்பெற்றுள்ளன. இச்செய்தியின்படி எங்களுக்கிருந்த வரவேற்பை நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், இந்தியா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று எமது முத்திரையைப் பதிய வைத்து வந்துள்ளோம்.

தங்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் இடம்பெறும் கதையம்சங்கள் எவ்வாறானவையாக இருக்கும்?

பழந்தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள், இலங்கைப் பெரியார்கள் என்ற பல்வகைப்பட்ட விடயங்களையும் கதைக் கருக்களாகக் கொண்டு வில்லிசை நிகழ்ச்சிகளாகச் செய்வோம். கண்ணகி கதை, மகாபாரதம், இராமாயணம், புராணங்கள் (சமய வளர்ச்சியை அடிப்படை நோக்கமாகக் கொண்டவை), பெரியார்கள் வரிசையில் யோகர் சுவாமிகள், கந்த முருகேசனார் மற்றும் இந்தியத் தலைவர்களையும் தமிழ் வளர்த்த பெரியார்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதும் எனது முக்கிய நிலைப்பாடாகும். மகாபாரதம் 72 கதைகள், இலங்கையிலும் இந்தியாவிலும் இராமாயணக் கதை தொடர்ச்சியாக சின்னமணி தான் செய்துள்ளார் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

தங்களைக் கலைத்துறையில் ஈடுபாடு கொள்ள உந்து சக்தியாக இருந்தவர்களைப் பற்றிச் சொல்லுவீர்களா?

எனது குருநாதர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பல நுணுக்கங்களையும் புதிய மெட்டுக்களையும் அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல, என்னை  ஆசீர்வதித்ததும் ஒரு பேறாக எண்ணுகின்றேன். படிக்க, பரப்ப, பயில ஆசைப்படுபவர்களுக்கு முத்தமிழும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நான் என்னைத் தயாராக்கிக் கொண்டேன். எனது வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்தவர் எனது சகோரதன் "லண்டன் கந்தையா" புகழ் நா.நவரத்தினமாவார். அவர்தான் எனக்கு வழிகாட்டியாக இருந்து செயற்பட்டார்.

பழந்தமிழ்க் கலைகளை வளர்ப்பதில் நீங்கள் காட்டிவரும் ஆர்வம் அளப்பரியது. அத்துடன், மிகப்பெரிய நாடக நடிகராகவும் இருக்கின்றீர்கள் அவை பற்றித் தெரிந்து கொள்ளலாமா?

எமது பாரம்பரியக் கலைகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆர்வமுடையவனாக இருக்கின்றேன். கிராமியப் பாடல்கள், தெம்மாங்கு, கும்மி, காவடிச்சிந்து, தாலாட்டு, ஒப்பாரி என்பவற்றடன் காத்தவராஜன் கூத்துப்பாடல்கள், வடமோடி தென்மோடி கூத்துப் பாடல்கள் உட்பட பாரம்பரிய நாட்டார் பாடல்களை எனது வில்லுப்பாட்டுகளில் முழுமையாகச் சேர்த்துள்ளேன். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் அங்கங்களான உடுக்கிசை, நடனம், நாடகம், வில்லிசை எ;னபவற்றில் ஈடுபாடு கொண்டுள்ளமையால் மக்களின் பாராட்டுக்களையும் பரிசில்களையும் பெற்று வருகின்றேன். நாடகத் துறையைப் பொறுத்தளவில் சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம் இருந்தது. பாடசாலை நாட்களிலே நாடகங்களைப் பார்த்து நடிக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. வண்ணை கலைவாணர் நாடக மன்றம், அரியாலை நாடக மன்றம் ஆகியவற்றின் மூலம் இன்பக்கனவு, வீரமைந்தன், திப்பு சுல்தான், சரியா தப்பா போன்ற சமூக வரலாற்று நாடகங்களில் நடித்துள்ளேன். மாதனை கலா மன்றம் ஆரம்பிக்கப்பட்டு "அரிச்சந்திரா" நாடகம் மேடையேற்றப்பட்டது. அதில் நாரதர் வேடம் போட்டு நடித்தேன். மக்களின் பெருத்த ஆதரவு கிடைத்தது. தொடர்ந்து ஸ்ரீஸ்கந்த லீலா, பவளக்கொடி, ஸ்ரீவள்ளி, இராமாயணம், காத்தவராஜன் ஆகிய நாடகங்களை மேடையேற்றினோம். 

வில்லிசையில் உங்கள் வாரிசாக யாரைக் கூறுவீர்கள்?

சோக்கல்லோ சண்முகநாதனுக்கும் எனக்கும் மானசீகமான தொடர்பு இருந்து வந்திருக்கின்றது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற ஒரு வில்லிசை நிகழ்ச்சியில் எனது குழுவில் சோக்கல்லோ சண்முகநாதன் இருந்து சிறப்பான முறையில் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார். அவர் என்மேல் மிகுந்த பக்தியும் மரியாதையும் வைத்திருக்கின்ற ஒரு உண்மைக் கலைஞன். எனவே, வாரிசாக சோக்கல்லோ சண்முகநாதனைச் சொல்வதில் ஒரு திருப்தி. இன்று கொழும்பு மாநகரில் வில்லிசையை முன்னெடுத்துச் செல்வதில் அவரே முனைப்பாக நிற்கின்றார். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.

படிக்க, பரப்ப, பயில ஆசைப்படுபவர்களுக்கு முத்தமிழும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நான் என்னைத் தயாராக்கிக் கொண்டேன். [நன்றி: தினக்குரல்~தம்பி-சிவா]
 

 

 

     முகப்பு

 

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com