பொது மேடை     கதிரவன்.கொம்

 

பெண்: நீண்டு செல்லும் கண்ணீர்ப்பாதை

- தமிழ்நதி -

ஆக்ராவிற்குப் போய் தாஜ்மகாலில் காதலின் முகம் பார்த்துப் பரவசமடைகிறோம். இறந்தகாலத்துள் இழுத்துச் செல்லும் எகிப்திய பிரமிட் கண்டு வியக்கிறோம். கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பொங்கிப் பிரவகிக்கும் அழகிலிருந்து விழிகளை மீட்க முடியாமல் பிரமிக்கிறோம். இலங்கையின் சிகிரியா ஓவியத்தில் கலையின் வண்ணம் காண்கிறோம். ஆனால், உலகமெங்கும் தீரா வியப்பு ஒன்று இருந்துகொண்டே இருக்கிறது. அதை நாம் சென்று பார்க்க வேண்டியதில்லை. நமது வாழ்விலிருந்து பிரித்து விட முடியாத, எங்களோடு கூடவே இருக்கிற அதிசயம் அது. அதாவது, ஆண்-பெண்ணுக்கு இடையிலான பாரபட்சங்கள். நினைத்துப் பார்க்கும்போது ‘இது எப்படி நிகழ்ந்திருக்க முடியும்…?’என்னும் கேள்வி ஊடுருவுகிறது. மனித குலத்திற்குள் ஒரு பாலாரின் மீது மற்றையவர் ஆதிக்கம் செலுத்துவதென்பது இயல்பேபோல நம்மில் பலர் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அந்த மனோபாவத்தின் மீது கேள்விகள் எழுப்ப அஞ்சுகிறோம். அவ்வாறு கேள்வி எழுப்புவதையே மரபுமீறலாகக் கொள்கிறோம்.

‘மிருகங்களைப்போல’ என்று பலர் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அதிலுள்ள அபத்தத்தைப் பாருங்கள். ஏனைய மிருகங்களைக் காட்டிலும் பலமுள்ள சிங்கம் எப்படிக் காட்டின் ராஜா ஆனதுவோ அவ்வாறே மனிதனும் தன்னைவிட பலமற்ற உயிர் என்று கருதப்படும் (பெண் ஆணைவிட உடல்வலிமையில் குறைந்தவள் என்பது அறிவியல்ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.) பெண்ணைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பதில் நிறைவு காண்கிறான்.

‘வீடு’என்பது வாழும் இடமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. ஆண் ஆசுவாசம் செய்துகொள்வதற்கான அமைதிக்கூடமாக, கட்டற்ற அதிகாரத்தைப் பிரயோகிக்கக்கூடிய இடமாக, அவன் என்றென்றைக்கும் தலைவனாக இருக்கக்கூடிய ஒரு சாம்ராஜ்ஜியமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் புகை பிடிப்பது, மது அருந்துவது இன்னோரன்ன பழக்கவழக்கங்கள் கூட ஆண்களுடைய ஏகபோக (பெரிய சொத்துடமை பாருங்கள்) உரிமையெனவே கொள்ளப்படுகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், மது அருந்தியபின் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைக்கும் கூட ஆண் பொறுப்பாக மாட்டான் என்பதுதான். தீமை பயக்கும் பழக்கவழக்கங்களுக்கே ஏகபோக உரிமை கொண்டாடும் ஆண், சமூகத்தை வழிநடத்தும் அறிவியல், கலை, இலக்கியம், அரசியல் இவற்றில் எவ்விதம் நடந்துகொள்வான் என்பது கண்கூடு.

‘எவருக்கும் எவருடைய உடல் மீதும் உரிமையில்லை’ என்றும் ‘சுதந்திரம் என்பது அடுத்தவன் மூக்குநுனி வரைதான்’ என்றும் பேசிக்கொள்கிறோம். ஆனால், வீட்டில் வன்முறை என்பது அகற்றப்படமுடியாத ஒரு பூதமாக இருந்துகொண்டுதானிருக்கிறது. கணவனிடம் அடி வாங்கும் பெண்ணின் உடற்காயங்கள் நாளடைவில் ஆறிவிடக்கூடும். ஆன்மாவின் மீது விழும் அடிக்கு மருந்திடுவது யார்…? இழிவுபடுத்தப்பட்டதை அவளால் எப்படி மறக்க இயலும்…? வீட்டின் மூலைகளில் கரப்பான்பூச்சிகளைப்போன்று விரட்டி விரட்டி தாக்கப்படும்போது பெண் என்பவள் சக உயிர் என்ற நினைவு முற்றிலும் அழிக்கப்படுகிறது.

“அவர் எனக்கு எல்லாவிதமான சுதந்திரங்களையும் தந்திருக்கிறார்.” என்று சில பெண்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். ‘எல்லாவிதமான’என்பதற்கும் ‘எல்லைகள்’ உண்டு. அதற்கு வேறு விதமாக அர்த்தம் கொள்ளலாம். அதாவது ஆணுடைய குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் பெண்ணுடைய சுதந்திர வெளி இருக்கிறது. அந்த வட்டத்திற்குள் பிரவேசிக்க பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மீறிப் பிரவேசித்தால் “உங்களையெல்லாம் வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேணும் என்று சும்மாவா சொன்னார்கள்…?” என்று வெகுண்டெழுதல் நிகழும். ‘வைக்கவேண்டிய இடம்’என்பதற்கான பொருளை விளக்கப்போனால் ‘பெண்ணடிமை’எனப் பதில் வருதல் சாத்தியம்.

சமையலில் தொடங்கி பிள்ளைகளின் திருமணம் வரை ஆணின் அதிகார நிழல் நீண்டு படர்ந்துள்ளது. முக்கியமான முடிவுகள் அவனாலேயே எடுக்கப்படுகின்றன என்பதை ‘தண்டோராக்காரன்’என்ற கவிதை சொல்லிப்போகிறது.

முகப்பு